உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. அதனால் அரையிறுதிக்கு முன்னேறும் நான்காவது அணி எது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் அந்த அணி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதி. 

இந்நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டி மான்செஸ்டாரில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. புவனேஷ்வர் குமார் முழு உடற்தகுதி பெற்றுவிட்ட நிலையில், ஷமிக்கு பதிலாக அவர் ஆட வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஷமி தான் ஆடுவார். 

நான்காம் வரிசையில் ஆடிவரும் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். ஆனால் ரிஷப் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. இந்திய அணியில் தற்போது தேவையில்லாமல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. அதனால் விஜய் சங்கரை நீக்க வாய்ப்பில்லை. மேலும் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும் நன்றாகவே ஆடிவருகிறார். அதனால் இன்றைய போட்டியில் அவர்தான் ஆடுவார். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஷமி, குல்தீப், சாஹல், பும்ரா.