Asianet News TamilAsianet News Tamil

#INDvsNZ நீ பண்ண மாயாஜாலம்லாம் போதும் கிளம்புப்பா!சீனியர் வீரரிடம் சரணாகதியடையும் இந்திய அணி! உத்தேச ஆடும் 11

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the match against new zealand in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 30, 2021, 4:36 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை துபாயில் நடக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றன. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், நாளைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். எனவே நாளைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. நாளைய போட்டியில் ஜெயிக்கும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, க்ரூப் 2-ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகம் பெறும்.

அந்தவகையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் களமிறங்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

பேட்டிங் ஆர்டர்:

பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியின் ஆடும் லெவன், இந்தியாவின் சிறந்த அணி காம்பினேஷன் கிடையாது என்பது முன்னாள் ஜாம்பவான்கள் பலரது கருத்து. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்). இந்த பேட்டிங் ஆர்டர் மாற வாய்ப்பில்லை. இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் இருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை.

ஹர்திக் பாண்டியா:

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது பெரும் விவாதத்தை கிளப்பியதுடன், அணி காம்பினேஷனையும் பாதிப்பதால், அவர் பந்துவீசவில்லை என்றால் அவரை அணியில் எடுக்கக்கூடாது என்ற கருத்து உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக தயாரானபோது வலைப்பயிற்சியில் பந்துவீசினார். எனவே நியூசிலாந்துக்கு எதிராக 6வது பவுலிங் ஆப்சனாக ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக ஒருசில ஓவர்களை வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அவரும் நீக்கப்பட வாய்ப்பில்லை. அவரும் கண்டிப்பாக ஆடுவார்.

ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்:

ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிலும் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகிய இருவரும் பாகிஸ்தானுக்கு எதிராக ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், ஒரு போட்டியில் சரியாக ஆடாததற்காக, அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களான அவர்கள் இருவரையும் நீக்க வாய்ப்பில்லை. எனவே பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவது உறுதி.

ஸ்பின்னர்கள்:

ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மேட்ச் வின்னர்; அணியின் நிரந்தர வீரர். அவருடன் மற்றொரு ஸ்பின்னராக யார் ஆடுவார் என்பது தான் கேள்வி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மாயாஜால ஸ்பின்னராக பார்க்கப்படும் வருண் சக்கரவர்த்தி ஆடினார். டி20 உலக கோப்பைக்கு முன் இதே அமீரகத்தில் நடந்த ஐபிஎல்லில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு வருணின் செயல்பாடு இல்லை.

மாயாஜால ஸ்பின்னர் என்று கொண்டாடப்பட்ட வருணின் பவுலிங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவித மாயாஜாலமும் தென்படவில்லை. பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் மிகத்தெளிவாக அவரது பவுலிங்கை எதிர்கொண்டு அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் அவரால் வீழ்த்த முடியவில்லை.

நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், டெவான் கான்வே ஆகியோர் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொண்டு ஆடக்கூடியவர்கள். எனவே அவர்களிடமும் வருணின் பருப்பு வேகாது. அதனால் அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏகப்பட்ட அனுபவங்கள் நிறைந்த அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இதுமாதிரி பல முக்கியமான/இக்கட்டான போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உறுதியாக சிறப்பாக வீசி, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர் அஷ்வின். அந்தவகையில் டெவான் கான்வே, ஜிம்மி நீஷம், சாண்ட்னெர் என மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக அஷ்வின் சிறப்பாக செயல்படுவார். சீனியர் ஸ்பின்னரான அஷ்வின், எந்த நேரத்தில் எப்படி வீச வேண்டும், யாருக்கு எப்படி வீச வேண்டும் என்பது நன்றாக தெரிந்தவர். மேலும், நல்ல வேரியேஷனையும் கொண்டவர் என்ற வகையில், அஷ்வின் நியூசி.,க்கு எதிரான போட்டியில் ஆடுவார்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios