உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலக கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. அதேநேரத்தில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. 

தொடர் தோல்விகளின் காரணமாக இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இங்கிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தோற்று, மறுபக்கம் பாகிஸ்தான் அணி 2 போட்டியிலும் வென்றால் பாகிஸ்தான்  அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 2 தோல்விகள் அடைந்ததால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. இரண்டாமிடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 123 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும் 122 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாமிடத்தில் உள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. அந்த போட்டியில் இந்தியா வென்றால் முதலிடத்தில் நீடிக்கும்; இங்கிலாந்து வென்றால் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.