புகையிலை, மதுபானத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எல்லா காலக்கட்டத்திலுமே கொண்டிருப்பதுடன், அவற்றிற்கு எதிராக எப்போதுமே போராடிவரும் ஒரே கட்சி பாமக மட்டுமே. அந்தவகையில், அன்புமணி ராமதாஸின் சமீபத்திய கோரிக்கை ஒன்றை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி சென்னையில் நடந்தது. அந்த போட்டியின்போது, பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார் ஆகிய புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டன. தொலைக்காட்சிகள் மூலமும் விளம்பரப்படுத்தப்பட்டன. 

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் புகையிலை பொருட்களை விளம்பரம் செய்வதும் விளம்பர பலகைகள் வைப்பதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்துவதும் இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டப்படி குற்றம் என்பதால், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இனிமேல் புகையிலை விளம்பரங்கள் செய்வதையும் விளம்பர பலகைகள் வைப்பதையும் தடை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். பிசிசிஐக்கும் ஒரு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார் என எந்த புகையிலை விளம்பரங்களையும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இனி செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.