தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆலூரில் நடந்தது. லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி, இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது. 

முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் 17 ரன்களிலும் முரளி விஜய் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக இருந்தவர் பாபா அபரஜித். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த பாபாவும் 56 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 35 ஓவரில் 155 ரன்களுக்கு முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ஷாருக்கானும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் மட்டும் நன்றாக ஆடினார். 39 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். 39 ஓவரில் தமிழ்நாடு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை பெய்ததால் அதன்பின்னர் தமிழ்நாடு அணி பேட்டிங் ஆடவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் அடித்திருந்தார். 

டி.எல்.எஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பஞ்சாப் அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை வந்ததால் 12 ஓவர்களில் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. அதனால் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. எனவே லீக் சுற்று முடிவின் அடிப்படையில், தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழ்நாடு அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி நடந்திருந்தால் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றிருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மழையின் புண்ணியத்தால் இந்திய அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோலத்தான் சத்தீஸ்கர் அணியும். மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகளுக்கு இடையேயான போட்டி முழுவதுமாக நடந்திருந்தால் மும்பை அணி வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம். ஆனால் மழை குறுக்கீட்டால், லீக் சுற்றில் மும்பையை சத்தீஸ்கர் வீழ்த்தியிருப்பதால் அரையிறுதிக்கு முன்னேறியது. 

அரையிறுதி போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி. மற்றொரு அரையிறுதியில் கர்நாடகாவும் சத்தீஸ்கரும் மோதுகின்றன.