ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, சில பவுலர்களின் காயம் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பையும் பெற்ற நடராஜன், அந்த போட்டிகளில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார்.

அதன்விளைவாகத்தான், டெஸ்ட் கிரிக்கெட்டின் நெட் பவுலராகவும் இந்திய அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது நல்ல நேரம், ஆஸி.,க்கு எதிரான இதே டெஸ்ட் தொடரிலேயே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதற்கான தருணம் கைகூடி வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஷமியும் 2வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவும் காயத்தால் வெளியேறியுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது டெஸ்ட்டில் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக நடராஜன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்கக்கூட வாய்ப்புள்ளது.