இந்திய கிரிக்கெட்டில் முக்கியமான மற்றும் சிறப்பான காலக்கட்டம், சவுரவ் கங்குலி கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய காலக்கட்டம்தான். கங்குலி தலைமையிலான அணியில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே என ஒட்டுமொத்த அணியுமே மிகச்சிறந்த அணியாக திகழ்ந்தது. 

கங்குலி ஆக்ரோஷமான கேப்டனாகவும் வீரராகவும் திகழ்ந்தார். ஆனால் அணியில் இருந்த மற்ற வீரர்களான சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோர் மிகவும் நிதானமானவர்கள், சாதுவானவர்கள். களத்தில் கோபத்தை பெரியளவில் வெளிப்படுத்தாத வீரர்கள். 

சச்சின், டிராவிட், லக்‌ஷ்மண் எல்லாம் ஸ்லெட்ஜிங் செய்ய சொன்னால் கூட எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டார்கள் என்று கங்குலியே கூறியிருக்கிறார். ஜெண்டில்மேன் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களாக ராகுல் டிராவிட், லக்‌ஷ்மண் ஆகியோர் திகழ்ந்தனர். 

அதிலும் லக்‌ஷ்மணுக்கு எல்லாம் கோபமே வராது. லக்‌ஷ்மண் களத்தில் கோபப்பட்டு பார்ப்பதே அரிது. ஆனால் அவர் ஒருமுறை பொறுமையை இழந்து கடும் கோபமடைந்ததாக கூறியுள்ள சுரேஷ் ரெய்னா, அந்த சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

2010ல் மொஹாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவத்தைத்தான் ரெய்னா நினைவுகூர்ந்துள்ளார். அந்த போட்டியில் லக்‌ஷ்மண் ஆடியது, அவரது கெரியரில் அவர் ஆடிய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. 

டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் பல முறை சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ள வீரர் லக்‌ஷ்மண். 2010 மொஹாலி டெஸ்ட்டிலும் அவர் தான் அணியை காப்பாற்றினார். அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு 216 ரன்கள் தேவை. ஆனால் இந்திய அணி 124 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

கடைசி 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 92 ரன்கள் தேவைப்பட்டது. அப்படியான இக்கட்டான சூழலில், தானும் சிறப்பாக ஆடி இஷாந்த் சர்மாவையும் சிறப்பாக வழிநடத்தினார் லக்‌ஷ்மண். 9வது விக்கெட்டுக்கு லக்‌ஷ்மணும் இஷாந்த் சர்மாவும் இணைந்து 81 ரன்களை சேர்த்தனர். இஷாந்த் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பிரக்யான் ஓஜா, லக்‌ஷ்மணுடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார். லக்‌ஷ்மணுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் ரெய்னா அவருக்காக ரன் ஓடினார். 

எஞ்சிய 11 ரன்களையும் அடித்து இந்திய அணி அந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்‌ஷ்மண் அந்த இன்னிங்ஸில் 72 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். மிகவும் பரபரப்பான மற்றும் த்ரில்லான அந்த போட்டியில் நடந்த சம்பவத்தைத்தான் ரெய்னா பகிர்ந்துள்ளார். 

அந்த இன்னிங்ஸில் லக்‌ஷ்மண் கோபப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் பகிர்ந்துள்ளார். அந்த சம்பவம் குறித்து பேசிய ரெய்னா, அந்த இன்னிங்ஸில் ஆடும்போது லக்‌ஷ்மணுக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் நான் தான் அவருக்காக ரன் ஓடினேன். மிட்செல் ஜான்சனின் ரிவர்ஸ் ஸ்விங்கை எல்லாம் சமாளித்து, அவரும் இஷாந்த் சர்மாவும் பேட்டிங் ஆடி, வெற்றிக்கு அருகில் அழைத்துவந்தனர். இஷாந்த் அவுட்டானதும் பிரக்யான் ஓஜா கடைசி விக்கெட்டாக களத்திற்கு வந்தார். 

அப்போது, வேகமாக ரன் ஓடு என்று பிரக்யான் ஓஜா மீது கடும் கோபமடைந்து கத்தினார் லக்‌ஷ்மண். அதற்கு முன் லக்‌ஷ்மண் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. ஓஜா மீது கடும் கோபமடைந்தார். லக்‌ஷ்மண் பேட்டிங் முனையில் இருக்க வேண்டும் என்பதால், நான் டைவ் அடிக்கவெல்லாம் தயாராகிவிட்டேன். என்ன நடந்தாலும், லக்‌ஷ்மண் பேட்டிங் முனைக்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது என ரெய்னா கூறியுள்ளார். 

ரெய்னா டெஸ்ட் அணியில் அறிமுகமான புதிதில் நடந்த சம்பவம் இது. இதேபோல, எத்தனையோ போட்டிகளில், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பிய பின்னரும், தனி ஒருவனாக களத்தில் போராடி வெற்றி தேடிக்கொடுத்திருக்கிறார் லக்‌ஷ்மண் என்பது குறிப்பிடத்தக்கது.