Asianet News TamilAsianet News Tamil

சிஎஸ்கேவில் செம கம்பேக் கொடுத்த சின்ன தல.. ரெய்னாவின் அதிரடி அரைசதத்தால் DCக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த CSK

சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும், சாம் கரன், ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 188 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

suresh raina fifty lead csk to set challenging target to delhi capitals in ipl 2021
Author
Mumbai, First Published Apr 10, 2021, 9:29 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பையில் நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங்  ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் ஆவேஷ் கானின் பந்தில் 2வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட்டை கிறிஸ் வோக்ஸ் 5 ரன்னில் வீழ்த்த, 7 ரன்னுக்கே சிஎஸ்கே அணி 2 விக்கெட்டை இழந்தது.

கடந்த சீசனில் ஆடாமல், இந்த சீசனில் கம்பேக் கொடுத்த ரெய்னா, அதிரடியாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் மற்றும் மிஷ்ராவின் ஸ்பின் பவுலிங்கை ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து அடித்து நொறுக்கினர். 

suresh raina fifty lead csk to set challenging target to delhi capitals in ipl 2021

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 3வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மொயின் அலி, அஷ்வின் பந்தில் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ராயுடுவும் ரெய்னாவுடன் இணைந்து அடித்து ஆடினார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியில் செம கம்பேக் கொடுத்த வேளையில், ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ராயுடு விக்கெட்டுக்கு பின், ஜடேஜா ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். 16வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா ஆட, அதற்கு 2வது ரன் ஓட முயன்றபோது ஜடேஜா, பவுலர் ஆவேஷ் கான் மீது மோதியதால் 2வது ரன்னை ஓட முடியாமல் திரும்ப, பாதி பிட்ச்சுக்கு ஓடிவந்த ரெய்னாவால் க்ரீஸுக்கு திரும்ப முடியவில்லை. எனவே 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தோனி, அதேஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் டக் அவுட்டானார்.

இதையடுத்து டெத் ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சாம் கரன் 15 பந்தில் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்த சிஎஸ்கே, 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios