Asianet News TamilAsianet News Tamil

கோலியுடன் மோதல்..? மொத்தமா ஓரங்கட்டப்பட்டதற்கு என்ன காரணம்..? ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரெய்னா

இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தன்னை, மீண்டும் அணியில் சேர்க்காதது குறித்த ஆதங்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
 

suresh raina again sharing his pain and discontent with selectors
Author
Chennai, First Published May 25, 2020, 8:59 PM IST

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. தோனியின் வலதுகரமாக திகழ்ந்தார் என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 

2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா. குறிப்பாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக ஆடினார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்த ரெய்னா, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அவரது இந்த இரண்டு சிறப்பான இன்னிங்ஸ்களும் தான் இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு காரணமே.

ஃபீல்டிங்கிலும் மிரட்டக்கூடியவர். ஜாண்டி ரோட்ஸுக்கே பிடித்த ஃபீல்டர் ரெய்னா. ஆனாலும் ரெய்னா 2017க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்த நிலையில், 2019 உலக கோப்பைக்கான மிடில் ஆர்டரி பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில், ரெய்னாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் ஆடிய தொடரை ரெய்னா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அத்துடன் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இதுவரை இந்திய அணியில் மீண்டும் நுழைய முடியவில்லை. 

சீனியர் வீரர்கள் விவகாரத்தை தேர்வுக்குழு சரியாக கையாளவில்லை எனவும் என்னை ஏன் ஓரங்கட்டினார்கள் என்று என்னிடம் சொல்லவேயில்லை என்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

ரெய்னாவின் குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வழிகாட்டுதல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உள்நாட்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் தான் மீண்டும் அணியில் எடுக்கப்படவில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் மீதான தனது கோபத்தை ரெய்னா வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, தேர்வாளர்களுக்கும் அணி வீரர்களுக்கும் இடையே கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். அணியின் சீனியர் வீரர்கள் எப்போதுமே எனக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர். ஆனால் தேர்வாளர்களின் ஆதரவும் அவர்களது முடிவும் நம் கைகளில் இல்லை. திலீப் வெங்சர்க்கார், கிரன் மோர் சார் உள்ளிட்ட பல சிறந்த தேர்வாளர்கள் இருந்துள்ளனர். அவர்களெல்லாம் சீனியர் - ஜூனியர் என்ற வேறுபாடெல்லாம் இல்லாமல் அனைவருடனும் பேசுவார்கள்.

ஒரு தேர்வாளருக்கு, ஒரு வீரரை ஏன் நீக்கினோம் என்று வீரரின் முகத்திற்கு நேராக சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், என்னிடம் நேருக்கு நேராக சொல்லியிருக்கலாம். என்மீது பிரச்சனை இருந்தால், நான் சரிசெய்திருப்பேன்.

விராட் கோலி என்னிடம் ஃபிட்னெஸில் கவனம் செலுத்த சொன்னார். நான் அதை செய்தேன். ரோஹித் சர்மாவிற்கு எனது திறமை தெரியும். எனக்கு எந்த வீரருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. தேர்வாளர் ப்ரொஃபஷனலாக இருக்க வேண்டும். நான் யாரையும் டார்கெட் செய்து பேசவில்லை என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios