பட்ஜெட்டில் பர்சேஸிங்கை முடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. மொத்த வீரர்களின் லிஸ்ட்
ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் நேற்று நடந்தது. கொல்கத்தாவில் நடந்த இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குறைவான தொகைக்கு சில வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வார்னர் - பேர்ஸ்டோ என்ற மிரட்டலான அதிரடி தொடக்க ஜோடியை பெற்றுள்ளது. கேன் வில்லியம்சன், ரஷீத் கான், முகமது நபி, பில்லி ஸ்டேன்லேக் ஆகிய திறமையான மற்றும் தரமான வெளிநாட்டு வீரர்களை கொண்டிருப்பதுடன் மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ரிதிமான் சஹா ஆகிய இந்திய திறமைசாலிகளையும் அணியில் கொண்டுள்ளது.
ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது ஆகிய இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர். அந்த அணி ஏலத்திற்கு முன்னதாக மார்டின் கப்டில், யூசுஃப் பதான், ஷகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, ரிக்கி பூய் ஆகிய வீரர்களை கழட்டிவிட்டது.
நேற்றைய ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு வீரருக்கு சன்ரைசர்ஸ் அணி கொடுத்த தொகையே ரூ.2 கோடிதான். ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷை ரூ.2 கோடிக்கு எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபேபியன் ஆலனை ரூ.50 லட்சத்துக்கு எடுத்தது. இவர்கள் தவிர மற்றவர்கள் உள்நாட்டு வீரர்களே. ப்ரியம் கர்க், விராட் சிங், சஞ்சய் யாதவ், அப்துல் சமத் ஆகிய உள்நாட்டு வீரர்களை குறைவான தொகைக்கு பட்ஜெட்டில் பர்சேஸிங்கை முடித்தது சன்ரைசர்ஸ்.
சன்ரைசர்ஸ் அணி:
கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ரஷீத் கான், முகமது நபி, அபிஷேக் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, ரிதிமான் சஹா, கோஸ்வாமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், ஷேபாஸ் நதீம், பில்லி ஸ்டேன்லேக், பாசில் தம்பி, டி.நடராஜன்.
புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள்:
மிட்செல் மார்ஷ், ஃபேபியன் ஆலன், ப்ரியம் கர்க், விராட் சிங், சந்தீப் பாவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத்.