சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டதால், குறைந்தது அடுத்த 2 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளது.

முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் வெற்றியை நேற்று பரிசளித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவின்(50*) அரைசதத்தால் 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது. 

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி கேன் வில்லியம்சனின் பொறுப்பான அரைசதத்தால் (57) கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே வரும் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடக்கும் முறையே கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இந்த தகவலை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்தார்.

ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான வீரர். எனவே அவர் ஆடாதது அடுத்த 2 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.