தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியும், 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. வரும் 11ம் தேதி கேப்டவுனில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட்.

2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக ஆடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி ஆடினார். 3வது டெஸ்ட்டில் கோலி வந்துவிடுவார். எனவே யார் நீக்கப்படுவார் என்ற கேள்வி உள்ளது. அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸை ஆடிய ரஹானேவும் புஜாராவும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். அவர்களது அனுபவத்திற்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதால் ஹனுமா விஹாரி தான் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

அதேவேளையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் 2வது டெஸ்ட்டில் காயமடைந்தார். அதனால் அவரால் அவர் பந்துவீச கஷ்டப்பட்டார். அவருக்கு அதிகமான பவுலிங் வழங்கப்படவில்லை. அவரால் அடுத்த டெஸ்ட்டிலும் நீண்ட ஸ்பெல்கள் வீசமுடியாது என்றால், அவர் நீக்கப்படுவார்.

இந்நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி காம்பினேஷன் குறித்து கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், சிராஜ் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பதிலாக வேறு வீரர் சேர்க்கப்படலாம். அதைத்தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. கோலி வந்துவிட்டால் விஹாரி நீக்கப்படுவார். சிராஜால் நீண்ட ஸ்பெல் வீசமுடியாது என்றால், உமேஷ் யாதவ் - இஷாந்த் சர்மா ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படுவார்.

ரஹானே - புஜாரா ஆகியோரின் அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கிறது இந்திய அணி நிர்வாகம். அவர்களும் கடந்த இன்னிங்ஸில் நன்றாக ஆடினார்கள். எனவே இளம் வீரர்கள் அவர்களுக்கான வாய்ப்பிற்கு காத்திருக்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.