இங்கிலாந்து அணியின் ஃபாஸ்ட் பவுலர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் சிப்ளி முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஓலி போப்பும் ஜோஸ் பட்லரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், போப் 91 ரன்கள் மற்றும் பட்லர் 56 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி.

2வது நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனிலேயே எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது இங்கிலாந்து. இன்றைய தினம் ஒரு ரன் கூட அடிக்காமல் கேப்ரியலின் பந்தில் கிளீன் போல்டாகி 91 ரன்னில் போப் ஆட்டமிழக்க, கிறிஸ் வோக்ஸ் ஒரு ரன்னிலும் அதற்கடுத்த ஒவரிலேயே பட்லரும்(67 ரன்கள்) ஆட்டமிழக்க, ஆர்ச்சரும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 262 ரன்களாக இருந்தபோது 5வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து, 280 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமல்லாது, யாருமே எதிர்பார்த்திராத வகையில், அதிரடியாக பேட்டிங் ஆடி, பவுண்டரிகளை விளாசிய ஸ்டூவர்ட் பிராட் அரைசதம் அடித்தார். ஸ்டூவர்ட் பிராடின் அதிரடி அரைசதத்தால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வெறும் 45 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 62 ரன்களை விளாசி, ரோஸ்டான் சேஸில் பந்தில் ஸ்டூவர்ட் பிராட் அவுட்டானார். கடைசி வீரராக களத்திற்கு வந்த ஆண்டர்சன் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கும். 

ஸ்டூவர்ட் பிராடின் இந்த அதிரடியான பேட்டிங், இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமானது. ஏனெனில், போப்-பட்லர் ஜோடி ஆடிய விதத்தின் அடிப்படையில், அந்த அணி பெரிய ஸ்கோரை அடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால் 300 ரன்களையாவது எட்டுமா என்ற நிலை உருவானது. ஆனால் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அணி நல்ல ஸ்கோரை அடிக்க உதவினார்.