இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. ஜனவரி 3ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் அடித்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் சார்பில், பேர்ஸ்டோவிற்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ஒலீ போப் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜோ ரூட், ஜோ டென்லி, சிப்லி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிவிட்டனர். பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ரூட், டென்லி ஆகியோர் முறையே 35 மற்றும் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் போப்பும் ஆண்டர்சனும் களத்தில் உள்ளனர். 

இந்த போட்டியில் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் அவுட்டான விதம் காமெடியாக இருந்தது. ரபாடா வீசிய யார்க்கரை அடிக்கலாமா வேண்டாமா என்கிற மனக்குழப்பத்தில் இருந்தார் பிராட். அவரது குழப்பம் தீரும் வரை பந்து காத்திருக்கவா செய்யும்..? பிராட், ஒரு முடிவுக்கு வருவதற்குள் பந்து ஸ்டம்பை பதம்பார்த்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியெ செல்லும் பந்தைத்தான், வீரர்கள்  ஆடாமல் விடுவர். ஆனால் பிராட், ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை தடுக்க முயற்சிகூட செய்யாமல் அப்படியே விட்டார். ஸ்டூவர்ட் பிராட் அவுட்டான விதத்தை ரசிகர்கள், டுவிட்டரில் படுமோசமாக கிண்டலடித்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ...