ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், அந்த அணிக்கு 1999ல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர். ஸ்டீவ் வாகின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தலைசிறந்து விளங்கியதுடன் வெற்றிகளை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டன் மட்டுமல்லாது, ஸ்டீவ் வாக் மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் கூட. 

ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,927 ரன்களையும் 325 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7569 ரன்களையும் குவித்துள்ளார் ஸ்டீவ் வாக். 

ஸ்டீவ் வாக் - ஷேன் வார்ன் ஆகிய இருவருக்கும் அவர்கள் கிரிக்கெட் ஆடிய காலத்திலேயே மோதல் போக்கு இருந்தது. அது ஓய்வுக்கு பிறகும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்டீவ் வாக்கை ஏற்கனவே ஷேன் வார்ன், சுயநல வீரர் என்று விமர்சித்திருக்கிறார். ஸ்டீவ் வாகிற்கு அணி ஜெயிப்பதை விட அவர் அரைசதம் அடிப்பதுதான் முக்கியம். அந்தளவிற்கு சுயநல வீரர் என்று தனது கேப்டன் ஸ்டீவ் வாக்கை ஷேன் வார்ன் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், அதை மீண்டும் வலியுறுத்திய ஷேன் வார்னிற்கு ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார். ராப் மூடி என்ற கிரிக்கெட் ஆவண காப்பாளர், வீடியோவுடன் கூடிய ஒரு டுவீட் செய்தார். அந்த டுவீட்டில், ஸ்டீவ் வாக் அவரது கெரியரில் 104 ரன் அவுட்டுகளில் பங்கெடுத்திருக்கிறார். அதில் 73 முறை அவருடன் பேட்டிங் ஆடியவர்களை ரன் அவுட்டாக்கியிருக்கிறார் என்று அந்த ரன் அவுட் வீடியோக்களை தொகுத்து ராப் மூடி பதிவிட்டிருந்தார். 

அதைக்கண்ட ஷேன் வார்ன், அதை ரீட்வீட் செய்து பதிவிட்ட டுவீட்டில், நான் தான் 1000 முறை சொல்லியிருக்கிறேனே.. ஸ்டீவ் வாக் சுயநல வீரர் என்று.. ஸ்டீவ் வாக்கை நான் வெறுக்கவில்லை. பெஸ்ட் ஆஸ்திரேலிய லெவனை நான் தேர்வு செய்தபோது கூட அதில் ஸ்டீவ் வாக்கை தேர்வு செய்திருந்தேன். எனவே நான் அவரை வெறுக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அதேவேளையில், நான் உடன் சேர்ந்து ஆடியதிலேயே படுமோசமான சுயநலவாதி கிரிக்கெட்டர் அவர் தான் என்று ஷேன் வார்ன் விமர்சித்திருந்தார்.

ஷேன் வார்னின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஸ்டீவ் வாக், ஷேன் வார்னின் கருத்து, அவரது மனநிலையையும் கேரக்டரையுமே பிரதிபலிக்கிறது. இதைத்தவிர நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று ஷேன் வார்ன் தான் சுயநலவாதி என்று ஸ்டீவ் வாக் பதிலடி கொடுத்துள்ளார்.