உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. 

அரையிறுதி போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும்  1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரருமான ஸ்ரீகாந்த், தனது ஆல்டைம் சிறந்த உலக கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். 

அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்ததில் ஆச்சரியமும் இல்லை. சச்சின் உலக கோப்பையில் செய்த சாதனைகளை சொல்லி தெரிய வேண்டியதுமில்லை. 2003 உலக கோப்பையில் சச்சின் அடித்த 673 ரன்கள் சாதனையை 16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ரோஹித் முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை அதுவே ஒரு உலக கோப்பையில் ஒரு வீரர் அடித்த அதிக ரன்களாக உள்ளது. ஆடம் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர். 1999, 2003, 2007 ஆகிய மூன்று உலக கோப்பைகளில் கில்கிறிஸ்ட் ஆடியுள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸையும் நான்காம் வரிசைக்கு சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார். ஐந்தாம் வரிசையில் ரிக்கி பாண்டிங், ஆறாம் வரிசையில் ஸ்டீவ் வாக் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

தனது கேப்டன் கபில் தேவை ஆல்ரவுண்டராகவும் வாசிம் அக்ரம், வெஸ்ட் இண்டீஸின் மார்ஷல் மற்றும் க்ளென் மெக்ராத் ஆகிய மூவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுத்துள்ளார். இலங்கை சுழல் ஜாம்பவான் முரளிதரனை ஸ்பின் பவுலராக தேர்வு செய்துள்ளார். 

ஸ்ரீகாந்த் தேர்வு செய்த அணியில் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த தோனியை புறக்கணித்துள்ளார். சச்சின், விராட் கோலி, கபில் தேவ் ஆகிய மூவர் மட்டுமே ஸ்ரீகாந்த் தேர்வு செய்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்கள்.

ஸ்ரீகாந்த் தேர்வு செய்த சிறந்த உலக கோப்பை அணி;

சச்சின் டெண்டுல்கர், கில்கிறிஸ்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி, ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், கபில் தேவ், வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன், மார்ஷல், க்ளென் மெக்ராத்.