இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக சொதப்பியது. 

இலங்கை இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, ஆஞ்சலோ மேத்யூஸின் அனுபவ சதம்(110), சண்டிமால்(52), டிக்வெல்லா(92), தில்ருவான் பெரேரா(67) ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 381 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே மிகச்சிறப்பாக ஆடி சதமடித்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவருமே இலங்கையின் இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். அபாரமாக ஆடி சதமடித்த ஜோ ரூட், இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், 186 ரன்களுக்கு ஆட்டமிழந்து 14 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். முதல் டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த ரூட், இந்த டெஸ்ட்டிலும் இரட்டை சதமடித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். ஜோஸ் பட்லரும் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் அடித்தது.

37 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, இந்த இன்னிங்ஸில் படுமோசமாக சொதப்பினர். மேத்யூஸ், குசால் பெரேரா, டிக்வெல்லா, சண்டிமால், திரிமன்னே என முக்கியமான வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் வெறும் 126 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி. இங்கிலாந்து அணியில் ஜாக் லீச் மற்றும் டோமினிக் பெஸ் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் கேப்டன் ரூட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து இலங்கை அணி வெறும் 163 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால் 164 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டும் இங்கிலாந்து அணி 17 ரன்னிலேயே முதல் விக்கெட்டை இழந்தபோதிலும், அதன்பின்னர் விக்கெட்டை இழக்காமல் ஐம்பது ரன்களை கடந்து ஆடிவருகிறது. எனவே இந்த டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்வது உறுதியாகிவிட்டது.