உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் ஆடிவருகின்றன. 

லீட்ஸில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் திரிமன்னே நீக்கப்பட்டு ஃபெர்னாண்டோ சேர்க்கப்பட்டார். 

தொடக்க வீரர்கள் கருணரத்னேவும் குசால் பெரேராவும் தான் இலங்கை அணியின் மிகப்பெரிய நம்பிக்கையே. ஆனால் அவர்கள் இருவருமே ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர். இரண்டாவது ஓவரில் ஆர்ச்சரின் பந்தில் கருணரத்னே ஆட்டமிழந்தார். கருணரத்னே ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த ஓவரிலேயே குசால் பெரேராவும் ஆட்டமிழந்தார்.

நட்சத்திர வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளும் ஆரம்பத்திலேயே விழுந்துவிட்ட நிலையிலும், அதன்பின்னர் களமிறங்கிய ஃபெர்னாண்டோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் களமிறங்கியது முதலே அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார். கொஞ்சம் கூட தயக்கமோ பதற்றமோ இல்லாமல் அசால்ட்டாக பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்தார். 

ஆனால் அதிரடியாக ஆரம்பித்த அவர், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவரை மார்க் உட் தனது வேகத்தில் வீழ்த்தினார். 

62 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இலங்கை அணி.