உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணியை 233 ரன்கள் என்ற இலக்கை எட்டவிடாமல் சுருட்டி அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.

உலக கோப்பை தொடரை மோசமாக தொடங்கிய இலங்கை அணி, முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றது. மோசமாக ஆடிவந்த இலங்கை அணி, உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்த இங்கிலாந்து அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் கண்டிப்பாக இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்திருக்கும். 

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி மேத்யூஸின் பொறுப்பான பேட்டிங்கால் 232 ரன்கள் அடித்தது. 234 ரன்கள் என்பது வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இங்கிலாந்து அணிக்கு கடினமான இலக்கு இல்லை. எனினும் இலங்கை அணியின் பவுலர்கள் அபாரமாக வீசி வெற்றியை சாத்தியமாக்கினர். 

தொடக்க வீரர் பேர்ஸ்டோ முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் வின்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் இருவரையுமே இலங்கையின் அனுபவ பவுலர் மலிங்கா வீழ்த்தினார். ஜோ ரூட்டும் கேப்டன் இயன் மோர்கனும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த நிலையில், மோர்கன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரூட்டை 57 ரன்களில் வீழ்த்தினார் மலிங்கா. முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, தனது இரண்டாவது ஸ்பெல்லில் ரூட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

ஒருமுனையில் ஸ்டோக்ஸ் நிலைத்து நிற்க, மறுமுனையில் பட்லர், மொயின் அலி, வோக்ஸ், அடில் ரஷீத் என அனைவரும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆர்ச்சரும் அவசரப்பட்டு பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டுக்கு மார்க் உட்டை மறுமுனையில் நிறுத்திவிட்டு ஸ்டோக்ஸ் அதிரடியை கையில் எடுத்தார். ஒவ்வொரு ஓவரையும் முழுவதுமாக ஆடிவிட்டு கடைசி பந்து அல்லது அதற்கு முந்தைய பந்தில் சிங்கிள் தட்டிவிட்டு, மீண்டும் மறு ஓவரில் ஸ்டிரைக்கை எடுத்து சாமர்த்தியமாக ஆடினார் ஸ்டோக்ஸ். 

ஆனால் 47வது ஓவரில் அவரது சாமர்த்தியம் பலனளிக்கவில்லை. நுவான் பிரதீப் வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய ஸ்டோக்ஸ், ஐந்தாவது பந்தில் சிங்கிள் தட்டி கடைசி பந்தை உட்டிடம் கொடுத்தார். அந்த ஒரு பந்தில் ஆட்டமிழந்தார் உட். 212 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாக 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.

போட்டிக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் கருணரத்னே, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று கூறினார். இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்த மிகவும் நெருக்கமான போட்டி இது. சில நேரங்களில் நெருக்கடி ஏற்பட்டது; சில தருணங்களில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஒருவழியாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டோம். இந்த ஆடுகளத்தில் 250-275 ரன்கள் அடித்தால் போதுமானதாக இருக்கும் நினைத்தோம். ஆனால் விக்கெட்டுகள் சரிந்ததால் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

மேத்யூஸ் பொறுப்புடன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். மலிங்கா தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை கடைசிவரை வைத்திருக்க வேண்டும் என்பதால் தனஞ்செயாவிடம் பந்தை கொடுத்தேன். அவரும் சிறப்பாக வீசினார். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக ஆடினால் ஒரு கேப்டனுக்கு அதைவிட வேறு எதுவும் தேவையில்லை. ரூட்டின் விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனை. சந்தேகத்துடன் தான் ரூட்டுக்கு ரிவியூ எடுத்தேன். அது பலனளித்தது என்று கருணரத்னே தெரிவித்தார். 

நன்றாக ஆடி அரைசதம் அடித்த ரூட், மலிங்கா வீசிய 31வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அதற்கு இலங்கை அணி ரிவியூ எடுத்தது. ரிவியூவில் அவுட் என்பது உறுதியானதால் ரூட் 57 ரன்களில் நடையை கட்டினார். அதன்பின்னர் தான் பட்லர், மொயின் அலி, வோக்ஸ், அடில் ரஷீத் என அடுத்தடுத்து இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணிக்கு வெற்றி வசப்பட ரூட்டின் விக்கெட் முக்கியமானதாக அமைந்தது.