இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி லீட்ஸில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். கேப்டன் கருணரத்னே ஒரு ரன்னிலும் குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஃபெர்னாண்டோ அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 39 பந்துகளில் 49 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் குசால் மெண்டிஸும் மேத்யூஸும் சிறப்பாக ஆடினர். நன்றாக பார்ட்னர்ஷிப் அமைந்த நேரத்தில் குசால் மெண்டிஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போட்டு ஆடிய மேத்யூஸ் அரைசதம் அடித்து அதன்பின்னரும் சிறப்பாக ஆடினார். கடைசிவரை பொறுப்புடன் களத்தில் நின்று ஆடிய மேத்யூஸ் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் 232 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.

233 ரன்கள் என்ற இலக்கு, நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட இங்கிலாந்து அணிக்கு கடின இலக்கே கிடையாது. ஆனாலும் இங்கிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர் பேர்ஸ்டோ முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் வின்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட்டும் கேப்டன் இயன் மோர்கனும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த நிலையில், மோர்கன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரூட்டும் 57 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் சூடுபிடித்தது. 

ஒருமுனையில் ஸ்டோக்ஸ் நிலைத்து நிற்க, மறுமுனையில் பட்லர், மொயின் அலி, வோக்ஸ், அடில் ரஷீத் என அனைவரும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆர்ச்சரும் அவசரப்பட்டு பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டுக்கு மார்க் உட்டை மறுமுனையில் நிறுத்திவிட்டு ஸ்டோக்ஸ் அதிரடியை கையில் எடுத்தார். ஒவ்வொரு ஓவரையும் முழுவதுமாக ஆடிவிட்டு கடைசி பந்து அல்லது அதற்கு முந்தைய பந்தில் சிங்கிள் தட்டி, மீண்டும் மறு ஓவரில் ஸ்டிரைக்கை எடுத்து சாமர்த்தியமாக ஆடினார் ஸ்டோக்ஸ். 

ஆனால் 47வது ஓவரில் அவரது சாமர்த்தியம் பலனளிக்கவில்லை. நுவான் பிரதீப் வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய ஸ்டோக்ஸ், ஐந்தாவது பந்தில் சிங்கிள் தட்டி கடைசி பந்தை உட்டிடம் கொடுத்தார். அந்த ஒரு பந்தில் ஆட்டமிழந்தார் உட். 212 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாக 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.