ஐபிஎல் 15வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் சைமன் கேடிச்.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12-13 ஆகிய தேதிகளில் நடந்தது. ஏலத்திற்கு முன்பாக கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக் மற்றும் அப்துல் சமாத் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ரூ.68 கோடியுடன் ஏலத்திற்கு சென்றது.
தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச், பேட்டிங் பயிற்சியாளர் பிரயன் லாரா, பவுலிங் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் என மிகப்பெரிய லெஜண்ட் குழுவுடன் ஏலத்திற்கு சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஏலத்தில் அந்தளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
ஏலம் ஆரம்பித்த முதல் 2 மணி நேரம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த வீரர் மீதும் ஆர்வம் காட்டாதது வியப்பாகவே இருந்தது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுக்க வேண்டும், தங்கள் அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்ற முழு திட்டத்துடன் வந்திருக்கும் என்பதால், அவசரப்பட தேவையில்லை என்றாலும், கொஞ்சம் கூட ஆரம்பத்தில் ஆக்டிவாக செயல்படாதது வியப்பாகவே இருந்தது.
அதன்பின்னரும் சில அனுபவமற்ற வீரர்களுக்கு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது அதிருப்தியளிக்கும் விதமாகவே இருந்தது. சிலர் சன்ரைசர்ஸின் இந்த செயல்பாட்டை விமர்சிக்கவும் செய்திருந்தனர்.
நிகோலஸ் பூரன் (ரூ.10.75 கோடி), அபிஷேக் ஷர்மா (ரூ.6.5 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.8.5 கோடி), வெஸ்ட் இண்டீஸின் ரொமாரியோ ஷெஃபெர்டு (ரூ.7.75 கோடி) ஆகிய வீரர்களை பெரும் தொகை கொடுத்து எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோருக்கும் கொடுக்கப்பட்ட தொகை சற்று அதிகமே.
இந்நிலையில் தான், ஏலத்திற்கு பின் சைமன் கேடிச் உதவி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டபடி, ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் செயல்படவில்லை. அந்த அணியின் வீரர்கள் தேர்வில் உடன்பாடில்லாததாலும், ஏலத்தில் வீரர்கள் தேர்வில் ஏற்பட்ட கருத்து முரணாலும் தான் சைமன் கேடிச் உதவி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணி மற்ற பயிற்சியாளர்களை விட, டாம் மூடியின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாது, அவரது பேச்சை மட்டுமே கேட்பதாக தெரிகிறது. அதனால் தான் அந்த அணியிலிருந்து பலர் தொடர்ச்சியாக வெளியேறிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
