இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த், சூதாட்டப்புகாரால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தடையில் இருந்ததால் கிரிக்கெட் ஆடவில்லை. அந்த தடையிலிருந்து மீண்ட ஸ்ரீசாந்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு சையத் முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணிக்காக ஆடவுள்ளார்.

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. அந்த தொடருக்கான கேரளா அனியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீசாந்த், அந்த தொடருக்கு முந்தைய பயிற்சி போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம்கண்டார். சுமார் 8 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் களம் கண்டாலும், அவரது ஆட்டிடியூட் கொஞ்சம் கூட மாறவில்லை. 

எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து சீண்டுவதற்கும், விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கும் பெயர்போனவர் ஸ்ரீசாந்த். எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தும் தனது ஆக்ரோஷமான செயல்பாடுகளினாலும் கடுப்பேற்றுவதில் கைதேர்ந்தவர் ஸ்ரீசாந்த். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவர் ஆடிய காலத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், மேத்யூ ஹைடன், ஆண்ட்ரூ நெல் ஆகியோருடனான மோதல் மிகப்பிரபலம்.

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி தொடருக்கு முந்தைய பயிற்சி போட்டியில் ஆடிய ஸ்ரீசாந்த், எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்ததுடன், விக்கெட் வீழ்த்திய பின்னர், தனது பழைய பாணியிலேயே ஆக்ரோஷமாக கொண்டாடினார். அந்த வீடியோவை கேரள கிரிக்கெட் சங்கம் யூடியூபில் பதிவேற்றியுள்ளது.