இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கியதால் 2013ம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் ஆடவில்லை. கடந்த ஆண்டுதான், அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் மீதான தடை முடிகிறது. எனவே மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஹெலோ லைவ் உரையாடலில் ஏற்கனவே பேசிய ஸ்ரீசாந்த், மீண்டும் ஹெலோ லைவில் பேசியுள்ளார். அப்போது, ஆல்டைம் உலக ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். 

உலக லெவனின் தொடக்க வீரர்களாக, ஆல்டைம் சிறந்த தொடக்க ஜோடியான சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடியை தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான ரன்களை குவித்த தொடக்க ஜோடி சச்சின் - கங்குலி ஜோடிதான். இருவரும் இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு மொத்தமாக 6609 ரன்களை குவித்துள்ளனர். 

மூன்றாம் வரிசை வீரராக வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் பேட்ஸ்மேன் பிரயன் லாராவை தேர்வு செய்துள்ளார் ஸ்ரீசாந்த். சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான சிறந்த பேட்ஸ்மேனான பிரயன் லாரா, டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். 299 ஒருநாள் போட்டிகளில் 10,405 ரன்களை குவித்துள்ளார். 

நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும் ஐந்தாம் வரிசைக்கு யுவராஜ் சிங்கையும் தேர்வு செய்துள்ள ஸ்ரீசாந்த், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக தோனியை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவானும், ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டருமான ஜாக் காலிஸை தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின்னராக ஆஸ்திரேலிய லெஜண்ட் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷேன் வார்னையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆலன் டொனால்ட் மற்றும் க்ளென் மெக்ராத்தையும் தேர்வு செய்துள்ளார். 

ஸ்ரீசாந்தின் ஆல்டைம் உலக லெவன்:

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, பிரயன் லாரா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ் சிங், தோனி, ஜாக் காலிஸ், ஷேன் வார்ன், ஆலன் டொனால்ட், க்ளென் மெக்ராத்.