இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் 1-1 என சமனடைந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் அக்டோபர் 2ம் தேதியன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் உள்ளன. எனினும் இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் தென்னாப்பிரிக்க அணியின் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களான டிவில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன் ஆகிய மூவருமே ஓய்வு பெற்றுவிட்டதால், அந்த அணிக்கு இந்த தொடர் கடும் சவாலாக இருக்கும். 

இந்திய அணி அனுபவம் வாய்ந்த அணியாக, அதுவும் சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் கெத்து காட்ட தயாராக இருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. இதுவரை இந்தியாவில் அதிகமாக ஆடிய அனுபவம் கொண்ட மற்றும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இல்லாமல், பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசிய தென்னாப்பிரிக்க வீரர் ஃபிலாண்டர், பெரிய வீரர்களின் மீதே ஸ்பாட்லைட் உள்ளது. எங்களது பணி இந்திய அணிக்கு முதல் குத்தை விடுவதுதான். இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை பெறும் முனைப்பில் இருக்கும். ஆனால் எங்கள் அணியின் சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு முதல் குத்தை கொடுக்க வேண்டும். ஒரு அணியாக, யார் மெதுவாக தொடங்குவார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நன்றாக தொடங்க வேண்டும். எங்கள் வீரர்களின் மீது அதிகமான அழுத்தம் இருக்கிறது. இந்திய அணியை இந்திய மண்ணில் எதிர்கொள்வது கடும் சவாலான விஷயம். அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று ஃபிலாண்டர் தெரிவித்தார்.