இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கை அணியும் ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணியும் வென்றன. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்களை அடித்தது. 135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் முதல் 3 விக்கெட்டுகள் பெரிதாக ஆடாத நிலையில், டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் இணைந்து நன்றாக ஆடினர். அவர்கள் இருவரும் அவுட்டானதை அடுத்து மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டுமினி ரன் அவுட்டாக, கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை இம்ரான் தாஹீர் அடிக்காமல் விட்டுவிட, ஆனாலும் ஸ்டெயினும் அவரும் ஒரு ரன் ஓடினர். அப்போது பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்திருக்கலாம். ஈசியான ரன் அவுட் வாய்ப்புதான். ஸ்டம்பிலிருந்து வெறும் 2 மீட்டர் பின்னால் நின்ற டிக்வெல்லாவால் ஸ்டம்பில் சரியாக அடிக்க முடியாததால் போட்டி டிராவானது. 

இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர், ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசியதால் அந்த அணி ஒரு ஓவரில் 14 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் திசாரா மற்றும் அவிஷ்கா ஆகிய இருவரையும் இம்ரான் தாஹிர் கட்டுப்படுத்தினார். இம்ரான் தாஹிர் சூப்பர் ஓவரை அருமையாக வீசினார். அந்த ஓவரில் இரண்டு வைடுகள் உட்பட மொத்தம் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து சூப்பர் ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது.