Asianet News TamilAsianet News Tamil

தீபக் சாஹரின் தனிநபர் போராட்டம் வீண்! இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 3வது  ஒருநாள் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து 3-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

south africa whitewashed india in odi series
Author
Cape Town, First Published Jan 23, 2022, 10:52 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலானை வெறும் ஒரு ரன்னில் இன்னிங்ஸின் 3வது ஓவரிலேயே வீழ்த்தினார் தீபக் சாஹர். 3ம் வரிசையில்  இறங்கிய கேப்டன் டெம்பா பவுமாவை கேஎல் ராகுல் டேரக்ட் த்ரோவின் மூலம் 8 ரன்னில் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். எய்டன் மார்க்ரமும் 15 ரன்னில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

70 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடினார் குயிண்டன் டி காக். டி காக்குடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாண்டர் டசனும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். தொடக்கம் முதலே அதிரடியாக அடித்து ஆடி எந்த சூழலிலும் ரன் வேகம் குறையாமல் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்திய குயிண்டன் டி காக் சதமடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் டி காக்கின் 17வது சதமான இந்த சதம், இந்தியாவிற்கு எதிராக 6வது சதம். 

4வது விக்கெட்டுக்கு டி காக் - டசன் ஜோடி 144 ரன்களை குவித்தது. 130 பந்தில் 124 ரன்கள் அடித்த டி காக்கை பும்ரா வீழ்த்த, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த வாண்டர் டசனை 52 ரன்களுக்கு சாஹல் வீழ்த்தினார். இன்னிங்ஸின் 36வது ஓவரில் டி காக்கும், 37வது ஓவரில் டசனும் ஆட்டமிழந்தனர். டசன் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 218 ரன்கள். அதன்பின்னர் ஃபெலுக்வாயோ, பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ் என ஒருமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், டேவிட் மில்லர் மறுமுனையில் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 38 பந்தில் 39 ரன்கள் அடித்த மில்லர் கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக மகாலாவும் ஆட்டமிழக்க, 287 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது.

288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழக்க, தவானும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 98 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த தவான் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார்.

அரைசதம் அடித்த விராட் கோலியும் கேஷவ் மஹராஜின் அருமையான பவுலிங்கில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் சூர்யகுமார் யாதவும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 32 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 210 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு சென்றது இந்திய அணி.

இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியான அந்த நிலையிலிருந்து, இந்திய அணியை மீட்டெடுத்து வெற்றி நம்பிக்கையை கொடுத்தார் தீபக் சாஹர். அதிரடியாக அடித்து ஆடிய தீபக் சாஹர், மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் பேட்டிங் ஆடத்தெரியாத பவுலர்களை வைத்துக்கொண்டு, நெருக்கடியான சூழலில் இருந்து இந்திய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றார். 

ஆனால் அரைசதம் அடித்த தீபக் சாஹர், இந்திய அணியின் வெற்றிக்கு 17 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, அவசரப்பட்டு தூக்கியடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 34 பந்தில் 54 ரன்கள் அடித்து கடைசி நேரத்தில் தீபக் சாஹர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பும்ராவும் சாஹலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 283 ரன்கள் அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியை 3 ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios