உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருவதால் மற்ற நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளை தொடர்ந்து 15 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபாஃப் டுபிளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் ஹாசிம் ஆம்லா, டுமினி, டேவிட் மில்லர், டேல் ஸ்டெயின் உள்ளிட்ட அனுபவ வீரர்களோடு இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். 

தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த தொடக்க வீரர் ஹாசிம் ஆம்லா, குறைந்த போட்டிகளில் ஆடி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். சாதனைகளை தன்வசம் வைத்துள்ள பல வீரர்களுடன் ஒப்பிடுகையில், குறைவான போட்டிகளில் அதிக சதங்களை அடித்து தென்னாப்பிரிக்க அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார். 

ஆனால் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். அவர் ஆடிய கடைசி 16 ஒருநாள் போட்டிகளில் ஒரேயொரு சதம் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த 16 போட்டிகளிலும் சேர்த்து அவரது சராசரி வெறும் 36 ரன்கள் மட்டுமே. அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும், எந்த நேரத்திலும் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என்பதால் அவரது அவசியம் கருதி அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

மிடில் ஆர்டரில் டுமினி, டுபிளெசிஸ், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், மார்க்ரம் ஆகியோரும் அணியில் உள்ளனர். லுங்கி இங்கிடி, ரபாடா, ஸ்டெயின் ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே உலக கோப்பை அணியில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆல்ரவுண்டர்கள் பெலுக்வாயோ, ப்ரெடோரியஸ் ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலிங் போடுவார்கள். 

இம்ரான் தாஹிர் மற்றும் ஷாம்சி ஆகிய இருவரும் ஸ்பின் பவுலர்கள். டுமின்யும் ஸ்பின் பவுலிங் போடுவார் என்பதால் அவரை மூன்றாவது ஸ்பின்னராக பயன்படுத்துவார்கள். ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசுவதுடன் நன்றாக பேட்டிங்கும் ஆடிவரும் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி:

டுபிளெசிஸ்(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ஹாசிம் ஆம்லா, ஜேபி டுமினி, டேவிட் மில்லர், மார்க்ரம், வாண்டர் டுசேன், ஃபெலுக்வாயோ, ப்ரிடோரியஸ், ரபாடா, ஸ்டெயின், லுங்கி இங்கிடி, நோர்ட்ஜே, இம்ரான் தாஹிர், ஷாம்சி.