ஜோஹன்னஸ்பர்க்கில் இந்திய அணியை முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வெற்றி சாதனை  படைத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய அணி, 1-0 என முன்னிலையும் வகித்தது. இந்நிலையில், செஞ்சூரியன் டெஸ்ட் தோல்விக்கு ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட்டில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் அடித்தது. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் அபாரமாக பேட்டிங் ஆடி 96 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெறச்செய்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-1 என தொடரை சமன் செய்தது.

ஜோஹன்னஸ்பர்க்கில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் இதற்கு முன் தோற்றதேயில்லை. தங்களது கோட்டையான செஞ்சூரியனில் தங்களை வீழ்த்தி சாதனை பெற்ற இந்திய அணியை, இந்திய அணி தோல்வியை சந்தித்திராத ஜோஹன்னஸ்பர்க்கில் வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்தது தென்னாப்பிரிக்க அணி. மேலும், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிகரமான 3வது சேஸிங் இதுதான்.