விறுவிறுப்பாக நடந்துவந்த உலக கோப்பை தொடரில் தொடர் மழையால் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. 

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த தொடர் படுமோசமாக தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணி ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது போட்டி, மழையால் பாதியில் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்றது தென்னாப்பிரிக்கா. 

முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நேற்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டது. ஆஃப்கானிஸ்தான் அணியும் ஒரு வெற்றியை கூட பெறாததால் அந்த அணியும் வெற்றி பெறும் முனைப்பில் களம் கண்டது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா ஸேஸாய் 22 ரன்களும் நூர் அலி 32 ரன்களும் எடுத்தனர். இவர்களுக்கு வந்த அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்திலும் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர். ரஷீத் கான் மட்டும் 25 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களை அடித்தார். 9ம் வரிசை வீரரான ரஷீத் கானின் பேட்டிங்கால் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 34 ஓவர்களில் வெறும் 125 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணி ஆல் அவுட்டானது. 

தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் இம்ரான் தாஹிர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 126 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்கும் ஆம்லாவும் அபாரமாக ஆடினர். அதிரடியாக ஆடிய டி காக் அரைசதம் கடந்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். 29வது ஓவரில் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த உலக கோப்பையில் ஒருவழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்க அணி.