தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடியது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் 13 ரன்களில் ஷாஹீன் அஃப்ரிடியின் வேகத்தில் விழ, வாண்டர் டசன் 17 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான டுப்ளெசிஸ், 23 ரன்னில் யாசிர் ஷாவின் சுழலில் வீழ்ந்தார். கேப்டன் குயிண்டன் டி காக் பதினைந்து ரன்னில் இடது கை ஸ்பின்னர் நௌமன் அலியின் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்த டீன் எல்கர், ஐந்தாவது விக்கெட்டாக நௌமன் அலியின் பந்தில் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க,  டெம்பா பவுமா 17 ரன்களில் ரன் அவுட்டானார்.

மஹராஜ், யாசிர் ஷாவின் பந்தில் டக் அவுட்டாக, விக்கெட்டுகள் சரிந்ததால் சற்று வேகமாக ஆடி ஸ்கோர் செய்ய தொடங்கிய ஜார்ஜ் லிண்டே, 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரபாடா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 21 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் லுங்கி இங்கிடி யாசிர் ஷாவின் பந்திலும் நோர்க்யா ஷாஹீன் அஃப்ரிடியின் பந்திலும் ஆட்டமிழக்க, 220 ரன்களுக்கே ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.

முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாவது செசனிலேயே முதல் இன்னிங்ஸில் சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அதைவிட மோசம். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி 4 ரன்னிலும், இம்ரான் பட் 9 ரன்னிலும் ரபாடாவின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.  15 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.  இதையடுத்து பாபர் அசாமும் அசார் அலியும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.