ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கை காக்கவைத்து கதறவிட்ட சம்பவம் குறித்து கங்குலி மனம் திறந்து பேசியுள்ளார். 

ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 1990கள் மற்றும் 2000ம்களின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. எதிரணிகளை அடித்து துவம்சம் செய்து வெற்றிகளை குவித்ததுடன், அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்திய அணி ஆஸ்திரேலியா.

ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலக்கட்டத்தில் தான், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி, சூதாட்டப்புகார் சர்ச்சையில் இருந்து இந்திய கிரிக்கெட்டை மீட்டு, இளம் வீரர்களை அடையாளம் கண்டு, இந்திய அணியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிகரமான அணியாக தயார் செய்து கொண்டிருந்த நேரம் அது.

அப்படியான சூழலில், 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது, கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. அதுதான் இந்திய கிரிக்கெட்டின் மதிப்பை மீண்டும் உயர்த்தியது. கங்குலி கேப்டனான பின்னர் நடக்கும் முதல் பெரிய தொடர் அதுதான். அந்த தொடரை 2- 1 என இந்திய அணி வென்றது. 

2001ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த அந்த சுற்றுப்பயணத்தில் தான், காலத்தால் அழியாத ராகுல் டிராவிட் - லட்சுமணன் பார்ட்னர்ஷிப், ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட்டுகள் ஆகிய அதிசயங்கள் நிகழ்ந்தன. 

அந்த தொடரில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் சீனியர் வீரருமான ஸ்டீவ் வாக்கை டாஸ் போடுவதற்கு கங்குலி காத்திருக்க வைத்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே. ஸ்டீவ் வாக்கே, கங்குலி தன்னை காக்கவைத்து கடுப்பேற்றியதாக தெரிவித்திருக்கிறார். ஸ்டீவ் வாக் மட்டுமல்லாது, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனும் கங்குலி மீது அதே குற்றச்சாட்டை அண்மையில் முன்வைத்தார். 

இந்நிலையில், மயன்க் அகர்வாலுடனான ஆன்லைன் உரையாடலை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில் கங்குலி, ஸ்டீவ் வாக்கை காக்கவைத்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

அதுகுறித்து பேசிய கங்குலி, 2001 தொடரின் முதல் போட்டி. டாஸ் போட போகும்போது, பிளேசரை டிரெஸிங் ரூமிலேயே வைத்துவிட்டு சென்றேன். அதனால் தான் தாமதமானது. ஆஸ்திரேலிய அணி அப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்ந்தது. நான் கேப்டனான பிறகு நடந்த முதல் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் அதுதான். அதனால் நான் பதற்றமாக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த அணியாக ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலியா. அதுமாதிரி ஒரு சிறந்த அணி அப்போது கிடையாது. நான் பதற்றத்தில் பிளேசரை மறந்து, பின் எடுத்து செல்வதற்கு தாமதமாகிவிட்டது. ஆனால் நான் தாமதமாக சென்றது, அவர்களை செம கடுப்பாக்கியது. அவர்கள் மனரீதியாக வெறுப்படைந்தது, இந்திய அணிக்கு சாதகமாகவிட்டது; 2-1 என தொடரை வென்றோம். ஸ்டீவ் வாக் எனது நல்ல நண்பர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்று கங்குலி தெரிவித்தார்.