ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸை ரூ.15.5 கோடி கொடுத்து கேகேஆர் அணி எடுத்தது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிகமான தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். 

ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், நாதன் குல்ட்டர் நைல், ஆரோன் ஃபின்ச் ஆகியோரும் நல்ல தொகைக்கு ஏலம் போனார்கள். ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின், நல்ல ஃபார்மில் அபுதாபி டி10 லீக்கில் சிறப்பாக ஆடியதால் அதிகமான தொகைக்கு ஏலம்போவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. எனவே  அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை அணி எடுத்தது. 

பாட் கம்மின்ஸ் அதிகமான தொகைக்கு எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் கணிப்பும் பரவலாக இருந்தது. ஆனால் ரூ.15.5 கோடி என்பது மிகவும் அதிகமான தொகை. இந்தளவிற்கு அதிகமான தொகைக்கு எடுக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே கம்மின்ஸை எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஆனால் ஒரு பாயிண்ட்டில் ஆர்சிபி இந்த போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, டெல்லி கேபிடள்ஸுடன் கம்மின்ஸுக்காக போட்டியிட்டது கேகேஆர். 

ரூ.15 கோடி வரை டெல்லி அணி கம்மின்ஸை எடுக்க கமிட் ஆனது. ஆனால் அதன்பின்னரும் கேகேஆர் ஏலத்தை தொடர்ந்ததால், டெல்லி அணி விலகிக்கொண்டது. கம்மின்ஸை ரூ.15.5 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது. 

இந்நிலையில், கம்மின்ஸ் அதிகமான விலைக்கு ஏலம்போனது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி, கம்மின்ஸுக்கு கொடுக்கப்பட்டது மிகவும் அதிகமான தொகை என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் அந்தளவிற்கு அவருக்கு கிராக்கி இருந்தது. குறைவான வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏலத்தில், தேவைக்கேற்ப வீரர்கள் அதிகமாக இல்லாததால், சில வீரர்கள் மிக அதிகமான தொகைக்கு ஏலம் போவது இயல்புதான். இதேபோன்றதொரு சிறிய ஏலத்தில் தான் பென் ஸ்டோக்ஸுக்கும் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்று கங்குலி, இதன்பின்னால் இருக்கும் லாஜிக்கை தெரிவித்துள்ளார்.