பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்துவருகிறது. முதல் போட்டி மழை காரணமாக முடிவில்லாமல் முடிந்தது. 

இரண்டாவது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஜமான் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஃபகர் ஜமான் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஹாரிஸ் சொஹைல், முகமது ரிஸ்வான், ஆசிஃப் அலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் பாபர் அசாம் 38 பந்துகளில் அரைசதம் அடித்து ரன் அவுட்டானார். 

பாபர் அசாமின் விக்கெட்டுக்கு பிறகு, அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய இஃப்டிகர் அகமதுவின் மீது முழு பொறுப்பும் இறங்கியது. அதை உணர்ந்து அபாரமாக ஆடினார் அவர். 18 ஓவரில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் அடித்திருந்தது. ரிச்சர்ட்ஸன் வீசிய 19வது ஓவரை பொளந்துகட்டிவிட்டார் இஃப்டிகர் அகமது. ரிச்சர்ட்ஸன் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை குவித்தார் இஃப்டிகர். கடைசி ஓவரில் 8 ரன்கள் அடிக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 150 ரன்கள் அடித்தது. 

151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 11 பந்துகளில் 20 ரன்கள் அடித்து வார்னர் ஆட்டமிழந்தார். ஃபின்ச் 17 ரன்களிலும் மெக்டெர்மோட் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய ஸ்மித் அரைசதம் கடந்தார். 

மிடில் ஓவர்களில் விக்கெட்டை இழந்துவிடாமல் இருக்க, சற்று நிதானமாக ஆடினார் ஸ்மித். ஸ்மித் களத்தில் நிலைத்துவிட்டதால் அவர் பார்த்துக்கொள்வார் என்பதை அறிந்த அஷ்டன் டர்னர், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வெறுமனே ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுத்தார். 16 ஓவர்கள் வரை பொறுமை காத்த ஸ்மித், இதற்கு மேலும் பொறுக்க வேண்டாம் என்று பொங்கி எழுந்து, 17வது ஓவரை அடித்து நொறுக்கினார். முகமது அமீர் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஸ்மித், வஹாப் ரியாஸ் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். இதையடுத்து 19வது ஓவரில் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

கடைசிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 80 ரன்களை குவித்த ஸ்மித், ஆட்டநாயகன் விருதை வென்றார்.