ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது. 

நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டாரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் சரியாக ஆடாத வார்னர், இந்த போட்டியிலும் சொதப்பினார். ஸ்டூவர்ட் ப்ராடின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். 

மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸும் சோபிக்கவில்லை. அவரும் 13 ரன்களில் நடையை கட்ட, அதன்பின்னர் லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடினார். ஆர்ச்சர், ப்ராட், ஓவர்டன் ஆகியோரால் இந்த பார்ட்னர்ஷிப்பை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியவில்லை. 

இருவருமே அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். லபுஷேன் 67 ரன்களில் ஓவர்டனின் பந்தில் ஆட்டமிழந்தார். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், முதல் நாள் ஆட்டத்தில் 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்துள்ளது. ஸ்மித் 60 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.