நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வார்னரும் ஜோ பர்ன்ஸும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.  ஜோ பர்ன்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னருடன் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோர் செய்தது. இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நிலையில், வார்னர் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து லபுஷேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான இருவரும் அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் அபாரமக ஆடிவருகின்றனர். ஸ்மித்தும் லபுஷேனும் மிகச்சிறந்த வீரர்கள். இருவருமே தனித்தனியாக ஆடினாலே, நல்ல ஸ்கோரை அடித்துவிடுவார்கள். இருவரும் இணைந்து ஆடினால் மெகா ஸ்கோர் அடிப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரையும் எவ்வளவு விரைவில் வீழ்த்துகிறதோ, அந்தளவிற்கு ஆஸ்திரேலிய அணியை முடிந்தவரை குறைந்த ஸ்கோருக்கு சுருட்டலாம். ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் விக்கெட்டை விட்டுக்கொடுக்கக்கூடிய வீரர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்துக்கொடுக்கும் இவர்கள் இருவரும் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணி 95 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்கு சென்றுவிட்டு வந்ததுமே அடுத்த ஓவரிலேயே வார்னர் அவுட்டானார். அதன்பின்னர் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடி இரண்டாவது செசனை முழுவதுமாக முடித்தனர். இரண்டாவது செசன் முழுவதும் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்தது அரைசதம் அடிக்கும் லபுஷேன், இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 

அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஸ்மித்தும் அரைசதத்தை நெருங்கிவிட்டார். லபுஷேன் சதத்தை நெருங்கிய நிலையில், ஸ்மித் அவருடன் சேர்ந்து தன் பங்கிற்கு தனது க்ளாஸான பேட்டிங்கை ஆடிவருகிறார். 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.