உலக கோப்பை நெருங்கிய நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டும்.

நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய வீரர்கள் இன்னும் உறுதி செய்யப்படாமலேயே உள்ளது. அந்த இடத்தை பிடிக்க பல வீரர்கள் தீவிரமாக உள்ளனர். நான்காம் இடத்தில் நீண்ட தேடுதல் படலத்திற்கு ராயுடு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ராயுடு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்ச்சியாக 3 போட்டிகளில் சொதப்பியதை அடுத்து அவரது இடம் இன்னும் உறுதியாகவில்லை.

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், 4ம் வரிசை வீரர் இன்னும் இழுபறியில் உள்ள நிலையில், பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது பரிந்துரையை தெரிவித்துவருகின்றனர். புஜாராவை நான்காம் வரிசையில் இறக்கலாம் என கங்குலி பரிந்துரைத்துள்ளார். தோனியையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என கும்ப்ளே தெரிவித்திருந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரர். அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் அவரையே இறக்கியிருக்கலாம். அவர் 4ம் வரிசைக்கு சரியாக இருந்திருப்பார். ஆனால் அவர் அணியில் எடுக்கப்படுவது சாத்தியமா என்பது தெரியாததால் கேஎல் ராகுலை இறக்கலாம் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார்.

ஐபிஎல்லில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பாண்டிங் தான் தலைமை பயிற்சியாளர். அதனால் ஷ்ரேயாஸ் ஐயரின் திறமையறிந்து பாண்டிங் அவரது பெயரை பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் உலக கோப்பைக்கான அணியில் தனக்கான வாய்ப்பு அதுவாகவே கிடைக்கும் என ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை அணியில் இடம்பிடிக்க நினைக்கும் வீரர்களுக்கு கடைசி வாய்ப்பு ஐபிஎல் தான். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் சில வீரர்கள் உள்ளனர். ஏற்கனவே ரஹானே நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடப்போவதாகவும் உலக கோப்பை அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் ரஹானே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலக கோப்பை அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல்லில் நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடினால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும். நான் நன்றாக ஆடினால் என்னை எளிதாக புறந்தள்ள முடியாது. என்னை அணியில் எடுப்பது குறித்து தேர்வாளர்கள் கண்டிப்பாக தீவிரமாக பரிசீலிப்பார்கள். அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.