தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகினார். இது இந்திய அணிக்கு பாதிப்பாக அமையும். ஆனால் மற்றொரு சிறந்த வீரரான சூர்யகுமார் யாதவ் இருப்பதால் பெரும் பாதிப்பாக அமையாது. 

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி புனேவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 317 ரன்களை குவித்த இந்திய அணி, இங்கிலாந்தை 251 ரன்களுக்கு சுருட்டி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங் ஆடும்போது ரோஹித் சர்மாவின் வலது முழங்கையில் மார்க் உட் வீசிய பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. ஆனால் அது அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காயமாக இல்லை.

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. இங்கிலாந்து பேட்டிங்கின் போது, ஷர்துல் தாகூர் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை பேர்ஸ்டோ ஆஃப் திசையில் ஓங்கி அடித்தார். அதை டைவ் அடித்து பிடிக்க முயன்றபோது ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்திலிருந்து வெளியேறினார். அதன்பின்னர் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை.

இந்நிலையில், தோள்பட்டை காயத்தால் அவர் குறைந்தது 2-3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார். 

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்கேன் செய்யப்படவுள்ளது. ஸ்கேன் முடிவை பொறுத்துத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்று பார்க்கப்படும். ஒருவேளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால், 2 மாதங்கள் ஷ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட் ஆட முடியாது. அதனால் ஐபிஎல்லிலும் ஆடமுடியாத அபாயம் உள்ளது.