வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி இந்திய அணி, கடினமான இலக்கை எட்டி வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார். இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவிற்கான அதிரடி அது. இனிமேல் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை அசைக்க முடியாது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எடுக்கப்பட்டனர். டி20 போட்டிகளில் மனீஷ் பாண்டே ஆடினார். ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார் ஷ்ரேயாஸ் ஐயர். இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்காம் வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை. இரண்டாவது போட்டியில் மந்தமாக ஆடி 20 ரன்கள் அடித்தார். நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். 

ரிஷப் பண்ட் சொதப்பும் அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி அசத்தினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 71 ரன்களை குவித்து முக்கிய பங்காற்றிய ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி போட்டியில் 35 ஓவர்களில் 255 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டும்போது, கோலியுடன் ஜோடி சேர்ந்து அடித்து நொறுக்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். ஷ்ரேயாஸின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 

வெறும் 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். இரண்டாவது போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரொடேட் செய்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி போட்டியில் அடித்து ஆடினார். இதன்மூலம் தன்னால் எந்த சூழலிலும் அதற்கேற்ப ஆடி அணியை காப்பாற்ற முடியும் என நிரூபித்து காட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த தொடரிலேயே இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர்.