கரீபியன் ப்ரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் ஷோயப் மாலிக் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். தொடக்க வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் கோல்டன் டக்கானார். மற்றொரு தொடக்க வீரரான பிரண்டன் கிங்கும் அவருடன் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மயரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 

37 பந்தில் 59 ரன்களை குவித்து பிரண்டன் கிங் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹெட்மயருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷோயப் மாலிக், அதிரடியாக ஆடினார். 37 வயதான பாகிஸ்தான் வீரரான ஷோயப் மாலிக், உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட்டானதை அடுத்து, கடைசி சில போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷோயப் மாலிக். 

ஷோயப் மாலிக்கெல்லாம் அவ்வளவுதான் என்று பேசப்பட்ட நிலையில், இந்த போட்டியில் தெறிக்கவிட்டார் மாலிக். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ரன் சேர்த்தார். மாலிக் ஒருமுனையில் நிலைத்து ஆடிக்கொண்டிருக்க, மறுமுனையில் ஹெட்மயர், பூரான், ரூதர்ஃபோர்டு ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மாலிக், 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியால் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 218 ரன்கள் அடித்தது. 

219 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியில் க்ளென் ஃபிலிப்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவர் மட்டுமே தலா 40 ரன்கள் அடித்தனர். அவர்களை தவிர கெய்ல் உள்ளிட்ட மற்ற எந்த வீரருமே சரியாக ஆடாததால், அந்த அணி 17.3 ஓவரில் 137 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து கயனா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.