ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலுக்கு முன் ஃபைனலுக்கு முன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஷோயப் அக்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக விளையாடி லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு முன்னேறியது. 

முதல் நாக் அவுட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. ஃபைனலில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இதற்கு முன் கேப்டன்சி அனுபவம் இல்லாதவர் என்றாலும், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி ஃபைனல் வரை அழைத்து வந்துள்ளார்.

களவியூகம், வீரர்களை கையாண்ட விதம், ஃபீல்டிங் செட்டப், நெருக்கடியான சூழல்களை கையாண்ட விதம் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு தேர்ந்த கேப்டனாக நடந்துகொண்டார். கேப்டன்சியில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் அபாரமாக பங்களிப்பு செய்தார். அவரது ஃபிட்னெஸ் கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்த சீசனில் பவுலிங்கும் செய்து, தன்னால் முழு ஃபிட்னெஸுடன் பந்துவீசவும் முடியும் என்று நிரூபித்தார்.

அதன்விளைவாக மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பாண்டியா இடம்பிடித்துள்ளார். அவரது கேப்டன்சி தான் அனைவரையும் இந்த சீசனில் வெகுவாக கவர்ந்தது. ஃபைனலில் ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வெல்லும் முனைப்பில் ஹர்திக் பாண்டியா உள்ளார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், ஹர்திக் பாண்டியா அருமையாக கேப்டன்சி செய்தார். இந்திய அணியின் கேப்டனுக்கான கதவை தட்டுகிறார். ரோஹித் சர்மா இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருப்பார் என்று தெரியவில்லை. அடுத்த கேப்டனுக்கான போட்டியில் ஹர்திக் பாண்டியா உள்ளார். ஒரு கேப்டனாக அவரது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவர் ஃபிட்னெஸிலும் பவுலிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆல்ரவுண்டராக அவர் ஃபிட்டாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக இந்திய அணியில் அவருக்கு ஒரு இடம் நிரந்தரமாக இருக்கிறது. ஆனால் வெறும் பேட்ஸ்மேனாக அவருக்கான இடம் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றார் அக்தர்.