பாகிஸ்தான் உருவாக்கியதில் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். தனது மிரட்டலான தோற்றம், பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரும் வேகம், அதிவேக பவுலிங்கின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது அதிவேகத்தால் மிரட்டியவர் அக்தர். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தனது யூடியூப் பக்கத்தில் அவ்வப்போது தற்போதைய கிரிக்கெட் குறித்தும், தான் ஆடிய காலத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்தும் பேசிவருகிறார் அக்தர். அவர் இந்தியில் பேசுவதால், அவரது யூடியூப் பக்கத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களையே நம்பியே இருக்கிறார். பாகிஸ்தானில் பெரியளவில் இதற்கு ரெஸ்பான்ஸ் இருக்காது என்பதால், இந்திய ரசிகர்களை கவர்வதற்காக, இந்தியாவிற்கு ஆதரவாகவும், இந்திய கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்தும் பேசிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

அந்தவகையில் தற்போது ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். 2003 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் லீக் சுற்றில் மோதின. அந்த போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 274 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களில், அக்தரின் பவுன்ஸரில் ஆட்டமிழந்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து ஹெலோ ஆப் லைவில் பேசிய அக்தர், சச்சின் 98 ரன்களில் அவுட்டானது எனக்கே பெரிய வருத்தம் தான். அது ஸ்பெஷலான இன்னிங்ஸ். அவர் சதத்தை எட்டியிருக்க வேண்டும். அவர் சதமடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமும் கூட. நான் வீசிய பவுன்ஸரில், சச்சின் ஏற்கனவே அடித்ததுபோல ஒரு சிக்ஸர் அடிப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் அவுட்டாகிவிட்டார். அது எனக்கு வருத்தமே என்று அக்தர் கூறியுள்ளார். 

அது வருத்தம்னா, அப்புறம் ஏன்ப்பா அந்த விக்கெட்டை அவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடினாய் என்ற கேள்வி அனைவரின் மனதுக்குள் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அந்த நேரத்தில் அந்த விக்கெட் அக்தருக்கு மகிழ்ச்சிதான். 17 ஆண்டுகள் கழித்து இப்போது நினைத்து பார்க்கும்போது வேண்டுமானால் வருத்தமாக இருக்கும். வர வர அக்தர் அள்ளிவிடுவதற்கு ஒரு லிமிட்டே இல்லாமல் போய்ட்டு இருக்கு...