இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

நாக்பூரில் நடந்த இந்த போட்டியில் 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் நைமும் மிதுனும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 98 ரன்களை குவித்தனர். அவர்கள் ஆடும்போது இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்படியான சூழலில் மிதுனின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் தீபக் சாஹர். 

அதன்பின்னர் தீபக் சாஹர் வெகு சிறப்பாக பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தினார். தீபக் சாஹர் 6 விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், ஷிவம் துபே வீசிய ஒரு விக்கெட் தான் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. 81 ரன்களுடன் களத்தில் நின்று இந்திய அணியை மிரட்டி கொண்டிருந்த முகமது நைமை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் தான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இந்த போட்டியில் ஷிவம் துபே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வங்கதேச அணியை 144 ரன்களுக்கு சுருட்டி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 

முகமது நைமை ஒரு அபாரமான யார்க்கரை வீசி காலி செய்தார் துபே. ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த யார்க்கரின் வீடியோ இதோ..