இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூன்றாவது போட்டி நாளை போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடக்கவுள்ளது. இந்த போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளன. எனவே இரு அணிகளும் ஒவ்வொரு நோக்கத்துடன் கடுமையாக போராடும் என்பதால் போட்டி கண்டிப்பாக மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். 

இந்த போட்டியில் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஷிகர் தவான். இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி 71 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து, அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்தார். மிடில் ஆர்டர் சிக்கலுக்கு ஓரளவிற்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தவான் சொதப்புவது பின்னடைவாக அமைந்திருக்கிறது. 

தவான் டி20 போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. 3 டி20 போட்டிகளில் முறையே 1, 23, 3 ரன்கள் மட்டுமே அடித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் டெஸ்ட் அணியிலும் இல்லை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை சிறப்பான முறையில் முடிக்க, கடைசி போட்டியில் சிறந்த இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

தவான் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்போம்.