உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஆடிவருகின்றன. 

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள டாப் 2 அணிகளில் ஒன்றான இந்திய அணி, இன்று நியூசிலாந்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் ஆட உள்ளது. இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்நிலையில், வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் இருவர் காயமடைந்திருப்பது இந்திய அணியை வருத்தம் அடைய செய்துள்ளது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசைக்கு தீர்வு காணும் வகையில் அணியில் எடுக்கப்பட்டிருந்த விஜய் சங்கருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கண்டிப்பாக பயிற்சி போட்டிகளில் ஆடமாட்டார். அவரது காயம் குறித்த இன்னும் வரவில்லை என்பதால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் ஆடுவாரா என்பது தெரியவில்லை. 

விஜய் சங்கரைப் போலவே வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஷிகர் தவானுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஷிகர் தவானுக்கு பயிற்சியின் போது நல்ல வேகத்துடன் வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்து, அவரது ஹெல்மெட்டை தாக்கியது. இதில் உதடு மற்றும் முட்டுவாய்ப்பகுதியில் தவானுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. தவானின் காயம் குறித்த அப்டேட்டும் இல்லை. எனினும் அவருக்கு பெரிய காயமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.