Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மன்னன் சேவாக்கே செய்திராத சாதனையை செய்த ஷர்துல் தாகூர்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் கபில் தேவுக்கு அடுத்த 2வது இடத்தை பிடித்துள்ளார் ஷர்துல் தாகூர்.
 

shardul thakur 2nd indian batsman that score fastest test fifty after kapil dev
Author
Oval, First Published Sep 3, 2021, 2:31 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்(11), ராகுல்(17) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாரா(4), ஜடேஜா(10) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் கோலி, 50 ரன்னில் நடையை கட்ட, அவரைத்தொடர்ந்து ரஹானே 14 ரன்னிலும் ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அடித்து ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5) மற்றும் ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரையும் இன்னிங்ஸின் 4வது ஓவரிலேயே வீழ்த்தினார் பும்ரா. முதல் நாள் ஆட்டம் முடியும் தருவாயில், இந்த தொடரில் செம ஃபார்மில் அருமையாக ஆடி போட்டிக்கு போட்டி சதமடித்துவந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை 21 ரன்னில் போல்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்துள்ளது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 30 பந்தில் அரைசதம் அடித்திருக்கிறார். அதுதான் இந்திய வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிவேக அரைசதம். அதற்கடுத்த இடத்தை பிடித்துள்ளார் 31 பந்தில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர்.

இந்திய அணியின் அதிரடி மன்னனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்களை விளாசியவருமான வீரேந்திர சேவாக் கூட செய்திராத சாதனையை ஷர்துல் தாகூர் படைத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios