ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். 2002ம் ஆண்டு பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான அவர், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணியில் ஆடியுள்ளார். அவரே கூட ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 

மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாட்சன், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே ஆகிய அணிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல்லில் முதல் சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ஷேன் வாட்சன், முதல் ஐபிஎல் டைட்டிலை ராஜஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதன்பின்னர் ராகுல் டிராவிட் தலைமையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடினார். 

2008லிருந்து 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய வாட்சன், 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் ஆடினார். அதன்பின்னர் அந்த அணியால் கழட்டிவிடப்பட்ட வாட்சன், 2018 மற்றும் 2019 சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக ஆடினார். அடுத்த சீசனுக்கும் சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு சர்வதேச அளவில் பாண்டிங், வார்ன், ராகுல் டிராவிட், தோனி, ஸ்மித், விராட் கோலி, மைக்கேல் கிளார்க் என பல கேப்டன்களின் கேப்டன்சியின் கீழ் ஆடிய வாட்சன், சிறந்த கேப்டன் யார் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவரும், தான் ஆடியதில் மிகச்சிறந்த கேப்டன்கள் என்று தெரிவித்துள்ளார். ரிக்கி பாண்டிங், என்னிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் உத்தி தெரிந்தவர். அவரது அருமையான கேப்டன். நான் மிகச்சிறந்த கேப்டன்களின் கீழ் ஆடியவகையில், மிகுந்த அதிர்ஷ்டசாலிதான் நான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன் கேப்டன்சியில் 4 ஆண்டுகள் ஆடினேன். அவரும் அருமையான கேப்டன். களத்திலும் களத்திற்கு வெளியேயும் உத்திகளை வகுப்பதில் வல்லவர். களத்தில் வீரர்களை கையாள்வதில் அவர் வல்லர். எனவே என்னை பொறுத்தவரை, நான் ஆடியதில் ரிக்கி பாண்டிங்கும் ஷேன் வார்னும் தான் மிகச்சிறந்த கேப்டன்கள் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.