ஐபிஎல்லில் 11 சீசன்கள் முடிந்த நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. 2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களில் கோப்பையை வென்றுள்ளது. அதிகமுறை ஐபிஎல் இறுதி போட்டியில் ஆடியுள்ள அணியும் சிஎஸ்கேதான். ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக 11 சீசன்களை கடந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது சிஎஸ்கே.

சூதாட்ட புகார் காரணமாக 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் தடையில் இருந்த சிஎஸ்கே அணி, இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு 2018ம் ஆண்டில் களமிறங்கி கோப்பையை வென்று கெத்தாக ரீ எண்ட்ரி கொடுத்தது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை சீசன் தொடங்குவதற்கு முன்னர் பலரும் வயதான அணி என கிண்டல் செய்தனர். அதற்கு காரணம் தோனி, வாட்சன், பிராவோ, ஹர்பஜன், ரெய்னா, ராயுடு என பெரும்பாலான வீரர்கள் 30 மற்றும் 35 வயதை கடந்தவர்கள். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு தங்களது திறமையான ஆட்டத்தால் பதிலடி கொடுத்தனர் சிஎஸ்கே வீரர்கள்.

நான்காவது முறையாக இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனில் வாட்சனின் ஆல்ரவுண்ட் ஆட்டம், சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு பெரும் உதவிகரமாகவும் காரணமாகவும் அமைந்தது. இந்த சீசனிலும் அவரது ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியம்.

கடந்த சீசனில் 15 போட்டிகளில் ஆடி 555 ரன்களை குவித்தார் வாட்சன். இந்நிலையில், இந்த முறையும் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக செம ஃபார்மில் உள்ளார் வாட்சன். வாட்சனின் இந்த ஃபார்ம், சிஎஸ்கே அணியை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளேடியர்ஸ் அணிக்காக ஆடிய வாட்சன், 430 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். 

ஐபிஎல்லுக்கு முன்னதாக வாட்சனின் இந்த ஃபார்ம், சிஎஸ்கே அணியையும் அணி நிர்வாகத்தையும் உற்சாகமடைய செய்துள்ளது.