கொரோனா வைரஸ் உலகம் முழுதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஊரடங்கால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சமூக, பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியிருப்பதுடன், விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

வீடுகளில் முடங்கியிருக்கும் இந்த சூழலில், ரசிகர்களின் கேள்விகளுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பதிலளித்துவருகின்றனர். ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் அணிகளை தேர்வு செய்திருந்த ஷேன் வார்ன், பாகிஸ்தானின் ஆல்டைம் சிறந்த அணியையும் தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் ஆல்டைம் டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக சயீத் அன்வர் மற்றும் ஆமீர் சொஹைல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். சயீத் அன்வர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களில் முக்கியமானவர். எனவே அவரையும் அமீர் சொஹைலையும் தேர்வு செய்துள்ளார். அவர்கள் இருவரும் அவர்கள் ஆடிய காலத்தில் மிகச்சிறந்த தொடக்க ஜோடி. இருவரும் இணைந்து பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கங்களை அமைத்து கொடுத்துள்ளனர். எனவே அவர்களை ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசையில் முகமது யூசுஃபையும் நான்காம் வரிசை வீரராக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கையும் ஐந்தாம் வரிசைக்கு முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் யூனிஸ் கானையும் ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ளார். இவர்கள் மூவரும் கண்டிப்பாகவே பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்கள். எனவே அவர்களை தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. 

விக்கெட் கீப்பராக மொயின் கானை தேர்வு செய்த ஷேன் வார்ன், ஸ்பின்னர்களாக ஆஃப் ஸ்பின்னர் சாக்லைன் முஷ்டாக்கையும் லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அகமதுவையும் தேர்வு செய்தார். ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஷோயப் அக்தர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த ஆல்டைம் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு வாசிம் அக்ரமை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் ஷேன் வார்ன். 

ஷேன் வார்ன் தேர்வு செய்த ஆல்டைம் பாகிஸ்தான் டெஸ்ட் அணி:

சயீத் அன்வர், ஆமீர் சொஹைல், முகமது யூசுஃப், இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், மொயின் கான்(விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம்(கேப்டன்), சாக்லைன் முஷ்டாக், முஷ்டாக் அகமது, ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ். 

வாசிம் அக்ரம் 1999 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 20 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வாசிம் அக்ரம், மொத்தம் 414 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் மட்டுமல்லாது நல்ல பேட்ஸ்மேன் மற்றும் அருமையான கேப்டனும் கூட. அதனால் தான் அவரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் ஷேன் வார்ன்.