சவுத்தாம்ப்டனில் நடந்த இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய அணி. ஆனால் பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனாலும் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆனாலும் தோனி களத்தில் நின்றதால், வழக்கம்போல டெத் ஓவர்களில் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியாவும் சோபிக்காததால் இந்திய அணி வெறும் 224 ரன்கள் மட்டுமே அடித்தது. 

225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பும்ராவும் ஷமியும் அபாரமாக பந்துவீசினர். தொடக்கம் முதலே இருவரும் இணைந்து ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ரன் அடிப்பதையே கஷ்டமாக்கினர். தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்ததால் அந்த அணியால் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. அதை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி இறுதியில் வெற்றியும் பெற்றது இந்திய அணி. 

புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அவருக்கு பதிலாக இந்த போட்டியில் களமிறங்கிய ஷமி, பும்ராவுடன் இணைந்து சிறப்பாக வீசினார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாயின் விக்கெட்டை வீழ்த்தியதற்கு பிறகு, கடைசி ஓவரில் தான் விக்கெட் வீழ்த்தினார். ஆனால் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நபி, அஃப்டாப் ஆலம், முஜீபுர் ரஹ்மான் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 

உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் ஷமி தான். 1987ம் ஆண்டு சேத்தன் சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அதன்பின்னர் உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது ஷமி தான். உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் போட்ட 10வது வீரர் ஷமி.  அந்த வீடியோ இதோ..