இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே டாப் ஃபார்மில் அசத்தி வெற்றிகளை குவித்துவருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்துவருகிறது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 300 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான் முக்கியமான காரணம். இதற்கு முந்தைய, எல்லா காலக்கட்டத்திலும் இருந்த இந்திய அணிகளும் பேட்டிங்கில் தலைசிறந்தே விளங்கியுள்ளன. 

ஆனால் தற்போதைய இந்திய அணியில் பவுலிங் சிறந்து விளங்குவதுதான் கூடுதல் பலம். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பும்ரா ஆடவில்லை. ஆனாலும் கூட ஷமி-இஷாந்த்-உமேஷ் கூட்டணி அபாரமாக வீசிவருகிறது. 

அதிலும் ஷமியின் பவுலிங் வேற லெவலில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்வதால், இரண்டாவது இன்னிங்ஸின் நாயகன் என ஷமி அழைக்கப்படுகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த போட்டியில் கூட இரண்டாவது இன்னிங்ஸில்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திவருவதன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார் ஷமி. 2018ம் ஆண்டிலிருந்து இந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஷமி தான். 

2018ம் ஆண்டிலிருந்து வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வரை, 20 இன்னிங்ஸ்களில்(இரண்டாவது இன்னிங்ஸ்) 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் டாப்பில் இருக்கும் பாட் கம்மின்ஸ் 2018லிருந்து இரண்டாவது இன்னிங்ஸில் 48 விக்கெட்டுகளையும் காகிசோ ரபாடா 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அவர்களையெல்லாம் தூக்கியடித்து ஷமி தான் டாப்பில் உள்ளார். அதனால்தான் ஷமி இரண்டாம் இன்னிங்ஸ் நாயகன்.